சென்னையில் பாரதியார் சங்கத்தின் 75 ஆம் ஆண்டு விழா!

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் முதன்மை அரங்கத்தில் வருகின்ற 11ஆம் தேதி காலை 9 மணிக்கு பாரதியார் சங்கத்தின் 75 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதுகுறித்து பாரதியார் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி மற்றும் கவிஞர் விஜய கிருஷ்ணன் ஆகியோர் கூட்டத்தை நடத்தினர். இதில் கலைமாமணி டாக்டர் வி.ஜி. சந்தோஷம், கலைமாமணி பேராசிரியர் முனைவர் சாரதா நம்பி ஆரூரன், முனைவர் ரேவதி ராதாகிருஷ்ணன், பாரதிய வித்யா பவன் இணை இயக்குனர் கே.வெங்கடாசலம், அனைத்திந்திய எழுத்தாளர் சங்கச் செயலாளர். இதய கீதம் ராமானுஜம் உள்ளிட்டோர் விழா குறித்து எடுத்துரைத்தனர். அப்போது கல்வியாளர் வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன், பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், முனைவர் மணிமேகலைக்கண்ணன், எழுத்தாளர் சிவசங்கரி உள்ளிட்ட சான்றோர்கள் விருதாளர்களுக்கு விருதளிக்க உள்ளனர். பாரதியார் விருது, பாரதி நுண்கலை விருது, பாரதி கல்விச் சுடர் விருது, இயற்றமிழ் விருது, இசைத்தமிழ் விருது, நாடகத் தமிழ் விருது, புதுமைப் பெண் விருது மற்றும் அயலக நாட்டியப் பேரொளி விருது ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். நிறைவாக பாரதியார் சங்கச் செயலாளர் கோ. மணி நன்றி கூறினார்.