வள்ளலாரின் புகழை அரை நூற்றாண்டு காலம் பரப்பியவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம்! சுதா சேஷையன் புகழாரம்!

சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் உள்ள கருத்தரங்க வளாகத்தில் கொங்குநாடு அறக்கட்டளை சார்பில் அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிஜிபி குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பழனி ஜி. பெரியசாமி தலைமை தாங்கினார். சென்னை கொங்குநாடு அறக்கட்டளை தலைவர் கே. ஆர். அப்பாவு வரவேற்புரை ஆற்றினார். சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ம. மாணிக்கம் முன்னிலை உரை நிகழ்த்தினார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர். சுதா சேசையன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அருட்செல்வர் செல்வம் உடையவர், வசதியானவர், பல நிறுவனங்களை நடத்துபவர் என்ற எல்லை எல்லாம் தாண்டி மனித நேயம் மிக்கவர், அருட்பிரகாச வள்ளலாரின் கருத்துக்களை அரை நூற்றாண்டு காலம் இம்மண்ணில் பரப்பியவர். அவர் வாழ்க்கையை பாட புத்தகங்களின் வாயிலாக வரலாறாக பதிய வேண்டும் என்றார். விழாவில் கொங்குநாடு அறக்கட்டளையின் செயலாளர் சி. அரவிந்தன், பொள்ளாச்சி நித்தியானந்தம் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக அருட்செல்வரின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிறைவாக அறக்கட்டளையின் பொருளாளர் வி. க. செல்வகுமார் நன்றி உரையாற்றினார்.