உழவருக்காக கட்டப்பட்ட கட்டிடமா? ஊழலுக்காக போடப்பட்ட திட்டமா?

2020-21 ஆம் ஆண்டில் இன்னசென்ட் திவ்யா ஆட்சி தலைவராக இருந்த காலத்தில் சுமார் 47.80 லட்சம் மதிப்பீட்டில் கோத்தகிரி குன்னூர் சாலையில் உள்ள பெட்டட்டி என்ற கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட உழவர் சந்தை எதற்காக,யாருக்காக என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. பணிகள் முடிந்து ஆண்டுகள் பலவாகியும் இப்படி ஒரு உழவர் சந்தை இருப்பது அந்த பகுதி மக்களுக்கே தெரியாது என்பதுதான் கூடுதல் சிறப்பு. ஏற்கனவே பல லட்சங்கள் செலவு செய்து கோத்தகிரி நகரில் இருக்கும் உழவர் சந்தையே கேட்பாரற்று கிடக்கிறது. இப்படி மக்களும் உழவர்களும் வர இயலாத இடங்களில் உழவர் சந்தைகள் ஆரம்பிக்கப்படுகிறது என்ற கேள்வி ஒரு புறம் இருக்க இன்னும் திறப்பு விழா காணாத அந்த கட்டிடங்களில் யாரோ துணி துவைத்து உலர்த்தி கொண்டிருக்கும் அரிய காட்சிகள்தான் இவை. இன்னும் கொஞ்ச நாளில் யாராவது பால் காய்ச்சி குடியேறினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. ஏற்கனவே கோத்தகிரி உழவர் சந்தை திறந்த வெளி பாராக் மாறி இருக்கும் நிலையில் அதன் கிளை போல பெட்டட்டி உழவர் சந்தையும் மாறும் அபாயம் உண்டு. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை.