தேனி மாவட்டம் தேசிய தூய்மைப்பணியாளர் மேம்பாட்டு ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் பணிதிறன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் தேசிய தூய்மைப்பணியாளர் மேம்பாட்டு ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் பணிதிறன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்கள் பணிதிறன் குறித்த ஆய்வுக் கூட்டம் தேசிய தூய்மைப்பணியாளர் மேம்பாட்டு ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா, முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய தூய்மை பணியாளர் மேம்பாட்டு ஆணையத் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தவுடன், தூய்மை பணியாளர்களுக்கு உரிய சீருடை, காலணி, கையுறை போன்ற பாதுகாப்பு உடைகளை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுத்தினார். மேலும், அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என பணியாளர்களை கேட்டுக்கொண்டார். தூய்மை பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பணியாளர்களின் பணிப்பதிவேடு, பணி மூப்பு வரன்முறைப்படுத்துதல் போன்ற அலுவலக ரீதியான பணிகளை அலுவலர்கள் பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின், உத்தரவின்படி தூய்மை பணியாளர்களுக்கான ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டு, அதனடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தின் வேறுபாடு தொகையை கணக்கீடு செய்து பணியாளர்களுக்கு நிலுவைதொகையாக வழங்குவதுடன், நடப்பு மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்ட ஊதிய தொகையினை வழங்கிட, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தூய்மை பணியாளர்கள் எளிதில் அறிந்தும் கொள்ளும் வகையில் ஒவ்வொரு நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் எனவும், மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் தூய்மை பணியாளர்களுக்கு சென்றடையும் வகையில் முகாம்கள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இதேபோல் தூய்மை பணியாளர்களுக்கு காப்பீடு தொகை சரியாக பிடித்தம் செய்து அவர்களது கணக்கில் வரவு செய்வதுடன் பணியாளர்களுக்கு அதன் விவரம் குறித்து அவ்வப்போது தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல் மாதாந்திர ஊதியத்தை வங்கிகணக்கில் வரவு வைக்க வேண்டும். அதேபோல் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவதை அரசு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அதேபோல் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கு உரிய சலுகைகளை பாரபட்சமின்றி வழங்கிட வேண்டும். பணியாளர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் 011-24648924 மற்றும் 88834 88888 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். ஆணையத்தில் தெரிவித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து தரப்படும் என தேசிய தூய்மைப்பணியாளர் மேம்பாட்டு ஆணையத்தலைவர் ..வெங்கடேசன் அவர்கள் தெரிவித்தார்.