10 ரூபாய் இயக்கம் சட்ட விழிப்புணர்வு முகாம்!

மதுரை இரயில் நிலையம் எதிரில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் 10 ரூபாய் இயக்க தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர். நல்வினை விஸ்வராஜ் தலைமை தாங்கினார். அவர் பயிற்சி முகாமில் பேசியதாவது: ஆரம்பத்தில் நாங்கள் இயக்கம் ஆரம்பிக்கும் போது லட்சக்கணக்கில் உறுப்பினர்கள் சேர்ந்தனர். அவ்வளவு பேர் தேவையில்லை! நமக்கு சேவை நோக்கத்தோடு செயல்படுகிறவர்களே தேவை என்ற அடிப்படையில் வடிகட்டப்பட்டு தற்போது 4000 பேர் உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. சாதாரண ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுமார் ஒரு கோடி வரை செலவு செய்து வெற்றி பெற்றவர்கள் நேர்மையுடன் செயல்படுவார்களா? சராசரியாக அரசு சார்பில் பஞ்சாயத்து தலைவருக்கு வழங்கப்படுகிற சம்பளம் ரூபாய் 1000 ஆக இருந்தது. தற்போது ரூ. 2000/- வரை வழங்கப்படுகிறது. படிக்காசு என்று ரூ. 400/- பெறுகிறார்கள். மொத்தம் ரூ. 2,400/- மாதந்தோறும் பெறுகின்ற ஒரு பஞ்சாயத்து தலைவர் சுமார் ரூ.1 கோடி வரை செலவு செய்து ஜெயிப்பது எதற்காக? இதனை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். 1872- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய சாட்சி சட்டம் லார்ட் மெக்காலே-வால் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டம் இப்போது போய் புதிதாக சட்டம் வந்துள்ளது. 2005- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி ரூபாய் 10 மதிப்பிலான ஸ்டாம்ப் பயன்படுத்தி அரசு அலுவலக நடவடிக்கையை நாம் கண்காணிக்கலாம்! வேலை வாங்கலாம்! எப்படி அரசு அலுவலகங்களில் சட்டமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் ஒரு பணி எப்படி நடைபெற்று உள்ளது? என்பதை ஆய்வு செய்ய முடியுமோ! அதைப்போல சராசரி பொதுமக்களும் அலுவலகப் பணி குறித்த தன்மையை ஆய்வு செய்யலாம். ஒரு கோரிக்கையின் மனுவினை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சாதாரண ரூ.5 மதிப்பிலான ஸ்டாம்ப் ஒட்டி மனுவினை அஞ்சல் செய்யலாம். அஞ்சல் செய்த தேதியினை குறிப்பிட்டு அந்த மனு மீதான நடவடிக்கை என்ன மேற்கொள்ளப்பட்டது? என்கின்ற கேள்வியினை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கலாம். 30 நாட்களில் பதில் வரவில்லை என்றால் நமக்கு அவர்கள் ரூ. 25000/- அபராதம் செலுத்த வேண்டும். எனவே பதில் உங்களுக்கு எப்படியும் வந்து சேரும். போட்ட மனுக்கள் மீதெல்லாம் உடனடியாக பதில் அளித்துவிட்டால் அல்லது நடவடிக்கை எடுத்து விட்டால் எந்த கோரிக்கைக்கு எங்கு விடை கிடைக்கும் என்பது தெரிந்து விட்டால் அனைத்து அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடும். இந்த உள்நோக்கத்துடன் தான் எந்த மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை அரசு தரப்பில் இருந்து கிடைக்கவில்லை என்ற சூட்சுமத்தை புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து நாம் அதனை கண்காணித்துக் கொண்டு வந்தால் இறுதியில் நமக்குத் தேவையான அடிப்படை சேவைகள் நிறைவேறும். இவ்வாறு அவர் பேசினார். முகாமில் அமைப்பின் மாவட்ட செயலாளர் பி செல்லப்பாண்டி, மதுரை மாவட்ட அமைப்பாளர் ஜெ. ரமேஷ் குமார், மாநில துணைச் செயலாளர்கள் டெஸ்மா வீரபாண்டியன், சீனிவாசன் மற்றும் ராஜ சேரன், சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.