இது சிக்கதாசம்பாளையமா??? இல்லை குப்பதாசம்பாளையமா???

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்தை உள்ளடக்கிய பகுதி சிக்கதாசம்பாளையம் கிராமம் பெயரளவிலே இது சிக்கதாசம் பாளையமாக இருந்தாலும் ஊர் முழுக்க குப்பை பரவி உள்ளதால் இதனை குப்பதாசம்பாளையம் என்று பெயர் மாற்றம் செய்துவிடலாம். சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ஒன்பதாவது வார்டு செல்வபுரம் பகுதியில் எல் இ எஃப் பள்ளி அருகில் தான் இந்த அவல நிலை. ஒவ்வொரு முறையும் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலரிடம்(கிராம ஊராட்சி) புகார் தெரிவித்தால் கடந்த ஆண்டு வரை புகார் தெரிவித்த பின்பாவது வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து குப்பையை அள்ளி சுத்தம் செய்து கொடுத்து கொண்டிருந்தனர். ஆனால் புதிதாக வந்துள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) எவ்வளவு முறை புகாரை தொலைபேசியில் தெரிவித்தாலும் அவர் கண்டு கொள்வதாக இல்லை மாறாக குப்பை கொட்டுவதற்கு இடமில்லை என்ற சப்பை காரணத்தை கூறி மழுப்பல் செய்கிறார். அரசு எவ்வளவு தான் இயங்கினாலும் அரசு அதிகாரிகள் இதுபோன்று மெத்தனப் போக்காக இருப்பதால் அரசாங்கத்திற்கு தான் தேவையற்ற கெட்ட பெயர் ஏற்படுகிறது. மேற்படி ஊராட்சியில் குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோன்று பல முக்கிய சாலைகள் மரண பள்ளங்களாக உள்ளது. அதேபோன்று குப்பைகளை சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகிறது. மேற்படி ஊராட்சியில் உள்ள மாடுகள் பசுக்கள் நாய்கள் ஆகியவை சுவையான பிளாஸ்டிக் கழிவுகளை அன்றாடம் தின்று உடல் உபாதைகளால் அல்லல்படுகின்றன. கொசு மருந்து அடித்து பல வருடங்கள் ஆகிறது. இந்த மெத்தனப்போக்குள்ள அரசு அதிகாரிகளை மாற்றம் செய்யவில்லை எனில் நிர்வாக சீர்கேடுகள் தான் அதிகரிக்கும். பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் பல நூறு மனுக்கள் புகார் குப்பைகளாக வழங்கப்பட்டு இன்றுவரை அவை அரசு அதிகாரிகளின் டேபிளில் தூங்கிக் கொண்டிருக்கிறது என்னவோ உண்மை.