அந்தியூர் அருகே தனியார் மினி பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.

விபத்தில் பள்ளி மாணவ, மாணவியர் 15 பேர் காயம். ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அம்மாபேட்டை அடுத்துள்ளது குருவரெட்டியூர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில், சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடித்து தனியார் மினி பேருந்தில் 50 க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். மினி பேருந்து குருவரெட்டியூரிலிருந்து சனிச்சந்தை செல்லும் வழியில் கருங்கரடு பிரிவு என்ற இடத்தில் சென்ற பொழுது, எதிரே மண் பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 15 பள்ளி மாணவ, மாணவியர் காயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் தங்களது சொந்த வாகனத்தில் அருகில் உள்ள குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக விபத்தில் காயம் அடைந்த குழந்தைகளை அனுமதித்தனர். இதில் படுகாயமடைந்த ஐந்து மாணவ, மாணவியர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் டிப்பர் லாரி ஓட்டுனர் ஆகியோருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி சென்ற மாணவர்கள் வீடு திரும்பியபோது விபத்து ஏற்பட்டதை கேள்விப்பட்டு பெற்றோர்களும், உறவினர்களும், ஊர் பொதுமக்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தால் சோகமும், பரபரப்பும் காணப்பட்டது. இப்பகுதியில் டிப்பர் லாரிகள் அதிகப்படியான மண் பாரம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுவே விபத்துக்கு காரணம் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் இதுபோல அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் தனி நபர்கள் தங்களது சொந்த வாகனங்களை பள்ளி மாணவ மாணவியர்களை ஏற்றி செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர் இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே இது குறித்து போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.