அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி எதிர்பார்க்கிறோம்! புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தியார் பேட்டி!

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் வருகின்ற மக்களவைத் தேர்தல் குறித்து இன்று நிருபர்களிடையே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சமூக நீதிக்காக போராடுகிற கட்சி என்று பழைய பல்லவியையே பாடி ஆட்சி நடத்தும் திமுக மீது எங்களுக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. பாரதிய ஜனதா கட்சியும் ஒரு மதவாத கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. அதற்கு எடுத்துக்காட்டாக ரூ.3000 கோடியில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை! பல்லாயிரம் கோடி செலவில் அயோத்தியில் ராமருக்கு கோயில் என்று முழுக்க முழுக்க இந்துத்துவா கொள்கையை கடைபிடிப்பதில் தனக்கு நிகர் தானே! என்று அக்கட்சி செயல்பட்டு வருகிறது. எனவே மாநில ஆளுங்கட்சி அல்லாமல் மத்திய ஆளும் கட்சியும் அல்லாமல் தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு செயல்படுகிற அதிமுக கூட்டணியில் தான் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். எங்கள் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று தொகுதிகளை கேட்போம்! இதில் ஏதேனும் ஒரு தொகுதியைத் தந்தாலும் மனம் உவந்து ஏற்றுக் கொண்டு வெற்றியை ஈட்டுவோம் இவ்வாறு அவர் கூறினார்.