தேனி ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டி கிராமத்தில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் 6 மாதங்களாக கழிவுநீர் தெருக்களில் தேங்கி தற்போது பச்சைநிறமாக மாறியுள்ளது!

குழந்தைகளுக்கு அம்மை நோய் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவுவதாகவும், முதியவர்கள் உள்ளிட்டோர் ‌ நாள்தோறும் சிரமத்திற்க்குள்ளாவதாகவும் வேதனை தெரிவிப்பதோடு, அரசுப்பள்ளிக்கு பின்புறம் உள்ள தெருபகுதி முழுவதுமே கழிவுநீர் தேங்குவதால் பள்ளியின் சுற்றுச்சுவரும் சேதம் அடைந்து மோசமான நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி பெண்கள் குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தேனி சாலையில் வலதுபுறத்தில் முத்தனம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளிக்கு பின்புறம் உள்ள தெருப்பகுதிகளில் கழிவுநீர் செல்ல முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் கழிவுநீர் தெருக்களிலேயே தேங்கி பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. முறையான கழிவு நீர் கால்வாய் அமைக்காமல் சிமெண்ட் சாலை மற்றும் இப்பகுதிகளில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் பள்ளமாக இருக்கும் பகுதிகளில் ஒரு மழை பெய்தாலே மழைநீர் குளம் போல தேங்குகிறது. அந்த தெரு பகுதிகளில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தெருக்களிலேயே கடந்த 6 மாதங்களாக தேங்கி பச்சை நிறத்தில் மாறியுள்ளதோடு, பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு அம்மை நோய் உள்ளிட்ட தொற்று நோய்களை பரப்பி வருவதாகவும், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்காளாவதாகவும் குற்றம் சாட்டும் அப்பகுதி பெண்கள். பள்ளியை சுற்றிலும் உள்ள சுற்றுச்சுவர் பகுதியிலும் மழைநீரும் கழிவு நீரும் தொடர்ந்து தேங்குவதால் ஏற்கனவே அப்பகுதியில் சேதம் அடைந்த நிலையில் இருக்கும் பள்ளியின் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து முத்தனம்பட்டி ஊராட்சி நிர்வாகம், ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டும் பெண்கள் மழைக்காலம் நெருங்குவதால் கழிவு நீரோடு நாள்தோறும் மழை நீரும் தேங்கி நாள்தோறும் பாதிப்பு ஏற்படுத்தி வருவதாகவும் உடனடியாக அரசு பள்ளிக்கு பின்புறம் உள்ள தெருப்பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீரோடு சேர்ந்த கழிவுநீரை அகற்றி முறையாக கழிவு நீர் கால்வாய் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட ஊர்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.